சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிக்கு பதிலாக வேறு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த தொன்னை பிரியாணி சரியான தேர்வாக இருக்கும். அந்த வகையில் சுவையான மற்றும் சத்தான பிரியாணி எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி,
மீல் மேக்கர்,
தயிர்,
எண்ணெய்,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
பூண்டு,
இஞ்சி,
புதினா,
கொத்தமல்லி,
வெந்தயக் கீரை,
கிராம்பு,
பட்டை,
ஏலக்காய்,
மிளகு மற்றும்
உப்பு.
செய்முறை:
இரண்டு கப் அளவிற்கு சீரக சம்பா அரிசியை, 15 நிமிடங்களுக்கு தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும். இதேபோல், ஒரு கப் மீல் மேக்கரை இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரில் ஊறவைக்க வேண்டும். இதனிடையே, பிரியாணிக்கு தேவையான மசாலா பொருட்களை வதக்க வேண்டும்.
அதன்படி, அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். இதில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, வெந்தயக் கீரை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொந்நிறமாக மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். இனி, சிறிது தண்ணீர் விட்டு இந்த பொருட்களை மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பில் பிரியாணி பாத்திரம் வைத்து அதில் இரண்டு டெபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இத்துடன் கரம் மசாலா பொருட்கள், பெரிய வெங்காயம் சேர்த்து பொந்நிறமாக வதக்கவும். இதில் தயிரில் ஊறவைத்த மீல் மேக்கர், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலக்கவும். அதன் பின்னர், ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் இருந்து தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான தொன்னை பிரியாணி தயாராக இருக்கும்.