சில சமயங்களில் நமது சமையலை திறம்பட மாற்றுவதற்கு ஏதாவது டிப்ஸ் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பலர் நினைப்பார்கள். அதன்படி, சில சூப்பரான டிப்ஸ்களை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
நமது வீட்டில் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு சைட்டிஷாக செய்யும் குருமா சில நேரத்தில் பற்றாக்குறையாக இருக்கும். அது போன்ற சமயத்தில் உருளைக் கிழங்கை மசிய வைத்து அதில் சேர்க்கலாம். இதேபோல், சூடான பசும்பாலையும் இத்துடன் சேர்க்கலாம். இது குருமாவின் அளவை அதிகரிக்கும்.
ஏலக்காயை உரித்த பின்னர் அவற்றின் தோலை குப்பையில் வீசுவோம். ஆனால், இனி அப்படி செய்யாமல் ஏலக்காய் தோலை சேகரித்து வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி, டீத்தூளுடன் கலந்து விடலாம். இதன் மூலம் தேநீரில் ஏலக்காய் மனம் வீசும்.
பெரும்பாலான சமயத்தில் எளிதாக தயாரிக்கும் உணவாக கிச்சடி விளங்குகிறது. அதன்படி, அடுத்த முறை கிச்சடி தயாரிக்கும் போது தண்ணீர் பாதியளவும், அதற்கு சமமாக தேங்காய் பாலும் சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் கிச்சடி கூடுதல் சுவையாக இருக்கும்.
ஜீரா ரைஸ் செய்வதும் இப்போது சில நிமிடங்களில் சாத்தியப்படும். அதன்படி, சீரகம், மிளகு ஆகிய இரண்டையும் நெய்யில் வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இனி, தேவையான அளவு வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இனி இவை இரண்டையும் சாதத்துடன் சேர்த்து கலந்தால் ஜீரா ரைஸ் தயாராகி விடும்.
மாலை நேரம் தேநீர் அருந்தும் போது பஜ்ஜி செய்து சாப்பிடுவோம். அடுத்த முறை புதினா மற்றும் தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்தால், சுவையும் நன்றாக இருக்கும். வாசனையும் சிறப்பாக இருக்கும்.
வத்தக் குழம்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில், ஆரஞ்சு பழ தோலையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி வத்தக் குழம்பு செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும். இந்த டிப்ஸ்கள் அனைத்தையும் உங்கள் கிச்சனில் பின்பற்றி சுவையைக் கூட்டி அசத்துங்கள்.