குழந்தைகளுக்கு லஞ்ச்க்கு என்ன செய்வது என்று பார்ப்போம். பன்னீர் ரைஸில் பன்னீரை மட்டும் சாப்பிட்டுவிட்டு சாதத்தை விட்டுவிடுவார்கள். ஆனால் எதையும் ஒதுக்காத 'பன்னீர் புர்ஜி ரைஸ்' மிகவும் நன்றாக இருக்கும்.
இது பன்னீரின் சத்தையும், சாதத்தின் ஊட்டச்சத்தையும் ஒன்றாகக் கலந்து, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ட்ரடிஷனலி மாடன்ஃபுட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெய் - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய குடைமிளகாய் (கேப்சிகம்) - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
ஷாகி பன்னீர் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
துருவிய பன்னீர் - அரை கப்
கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கழுவி ஊறவைத்த பாஸ்மதி அரிசி - 1/3 கப்
நறுக்கிய கொத்தமல்லி - தேவையான அளவு (அலங்கரிக்க)
செய்முறை:
ஒரு குக்கரை சூடாக்கி, அதில் அரை டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் சூடானதும், கால் டீஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும், நறுக்கிய 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து, நறுக்கிய 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், ஒரு டீஸ்பூன் ஷாகி பன்னீர் மசாலா, கால் டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மசாலாக்கள் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். வதக்கிய மசாலா கலவையுடன், தாராளமாக அரை கப் துருவிய பன்னீரைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கலந்து விடவும்.
கழுவி சுமார் 20-30 நிமிடங்கள் ஊறவைத்த 1/3 கப் பாஸ்மதி அரிசியை இந்தக் கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரை கப் தண்ணீர் ஊற்றி, கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
குக்கர் ஆறியதும், மூடியைத் திறந்து, தாராளமாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து பரிமாறவும்.