மதிய உணவுக்கு என்ன சமைப்பது என்று தினமும் யோசிக்கிறீர்களா? குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும், அதே சமயம் சத்தான ஒரு உணவைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த கொத்தமல்லி சாதம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த ரெசிபி, உங்கள் மதிய உணவை சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும். இதை எப்படி செய்வது என்று சுஜீஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சமைத்த சாதம்
கொத்தமல்லி
பச்சை மிளகாய்
புளி
துருவிய தேங்காய்
எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
உளுத்தம் பருப்பு
நெய்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில், கொத்தமல்லி, பச்சை மிளகாய், புளி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கிய இந்த கலவையை மிக்சர் ஜாரில் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, மற்றொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளித்ததும், அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இறுதியாக, சமைத்த சாதத்தை இந்தக் கலவையுடன் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறினால் போதும். சுவையை மேலும் கூட்ட, கடைசியாக அரை டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இந்த கொத்தமல்லி சாதம், மதிய உணவுப் பெட்டிக்கு ஒரு அருமையான மற்றும் சுவையான தேர்வாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு இது.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பல பி வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. கொத்தமல்லி விதைகளில் நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. எனவே கொத்தமல்லி சாதத்தை வாரத்தில் இரண்டு முறை செய்து கொடுங்கள் போதுமானது.