தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, கோயில் சென்று வழிபாடு செய்து, பொங்கல் வைத்து, கரும்பு உண்டு மகிழ்வர். வீடுகளில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைக்கப்படும். விவசாயத்திற்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் (வெள்ளை பொங்கல்) வைத்து வழிபாடு செய்யப்படும். அந்த வகையில் தித்திப்பான, மகிழ்ச்சியான சர்க்கரை பொங்கல் புதிய முறையில் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 220 கிராம் (1 கப்)
- பாசிப் பருப்பு - 75 கிராம் (1/4 கப்)
- உருண்டை வெல்லம் - 1 3/4 கப்
- முந்திரி, திராட்சை - தேவையான அளவு
- உப்பு, ஏலக்காய் - சிறிதளவு
- ஜாதிக்காய் - 2 சிட்டிகை
- பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
- பால் - 1/4 கப்
செய்முறை
முதலில், பச்சரிசியை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். புது அரிசியாக இருந்தால் சிறப்பு. பொன்னி பச்சரிசி வாங்கி கொள்ளுங்கள். அடுத்தாக பாசிப் பருப்பை வறுக்க வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து பாசிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இப்போது, இந்த பருப்பை அரிசியுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது பொங்கல் பானை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பால் 1/4 கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். அரிசி ஊற வைத்த தண்ணீர் 1 கப், அதோடு பொங்கல் வைக்க மேலும் தண்ணீர் சேர்க்கவும். அதாவது பானையில் 3/4 அளவிற்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். இப்போது பானையை அடுப்பில் வைக்கவும். தண்ணீர் பொங்கி வரும். வடகிழக்கு பக்கம் பொங்கல் பொங்கும் படி பானையை வைக்க வேண்டும். பொங்கல் பொங்கிய உடன் அரிசி, பருப்பு சேர்க்கவும். தண்ணீர் வடித்து சேர்க்கவும். அடுத்ததாக, உருண்டை வெல்லம் பொடித்து வைத்த வெல்லத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். அதோடு சிறிது உப்பு, நெய் தேவையாள அளவு சேர்க்கவும்.
பொடித்து எடுத்த ஏலக்காய், ஜாதிக்காய் 2 சிட்டிகை பொடித்து சேர்க்கவும். அதோடு 1 சிட்டிகை பச்சை கற்பூரம் பொடித்தது வேண்டும் என்றால் சேர்க்கலாம். மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கடைசியாக, திராட்சை, முந்திரி சேர்க்க வேண்டும். ஒரு கடாய் வைத்து நெய் சேர்த்து உருகி வந்ததும், முந்திரி பருப்பு, சிறிது சிறிதாக நறுக்கிய தேங்காய் சேர்க்கவும். உலர் திராட்சை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து வறுக்கவும். பின்னர் அதை சர்க்கரை பொங்கலில் சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு இறக்கவும் அவ்வளவு தான், சுவையான, டேஸ்டியான சர்க்கரை பொங்கல் ரெடி. கோமதி'ஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனலில் இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.