ஒரு கப் உளுந்த மாவை வைத்து சுமார் 50 அப்பளங்கள் வரை எப்படி தயாரிப்பது என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இவற்றை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
உளுந்து,
பேக்கிங் சோடா,
உப்பு,
நல்லெண்ணெய்
250 கிராம் அளவிற்கு வெள்ளை உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். இதனுடன் முக்கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர், இதில் சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தண்ணீரை உறிந்து எடுத்துக் கொள்ளும் தன்மை உளுந்துக்கு இருக்கும். அதனால், தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்க வேண்டும். மாவு பிசையும் போது 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும், இதனை 8 உருண்டைகளாக பிரித்து கொள்ளலாம். இதில் லேசாக மைதா மாவு தூவி சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும். மெல்லிசாக தேய்த்ததும் ஒரு டிபன் பாக்ஸ் மூடி கொண்டு சிறிய அப்பளம் அளவிற்கு பிரித்து எடுக்க வேண்டும்.
இந்த மாவை மடித்தால் உடையும் பதத்திற்கு வரும் வரை வெயிலில் காய வைக்க வேண்டும். இறுதியாக காய்ந்த அப்பளங்களை எண்ணெய்யில் பொறித்து பயன்படுத்தலாம்.