மாலை வேளையில் பெரும்பாலும் நாம் டீ, காபி உடன் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவோம். குழந்தைகள் பள்ளி முடித்து வந்தவுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். எப்போதும் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுடன் சற்று வித்தியாசமாக சாப்பிட்டு பாருங்கள். வேறு சுவையாக இருக்கும். முட்டைகோஸ், கேரட், பட்டணி சேர்த்து கலவையான ஒரு வடை செய்யலாம். இந்த வடை வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – 1 கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – 1 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 1 கப்
பச்சைப் பட்டாணி – 1 கப்
புதினா – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது மாவுடன் கேரட் துருவல், கோஸ் பொடியாக நறுக்கியது, குடமிளகாய், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து கலக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து பின்னர் தட்டையாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சூடான காய்கறி வடை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil