சப்பாத்தி, நாண், தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையில் முட்டை மிளகு பொடிமாஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சாதத்துடனும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 சிறியது
இஞ்சி, பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற வகையில் மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
இப்போது முட்டை வெந்து உதிரியாக வரும். அப்போது மீண்டும் சிறிதளவு மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil