நம்முடைய அன்றாட உணவுகளில் முக்கிய காய்கறியாக கத்தரிக்காய் இருக்கிறது. இந்த அற்புதமான காய்கறியை நம்மில் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இவற்றை தெளிவான செய்முறையில் சைடு டிஷ் ஆக செய்தால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும்.
கத்தரிக்காயில் பலவகை சைடிஷ்கள், குழம்புகள் செய்து அசத்தலாம். நீங்களும் அதை முயற்சித்து அசத்தி இருப்பீர்கள். அந்த வகையில், எண்ணெய் கத்தரிக்காய் நம்மில் பலர் முயற்சித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, டேஸ்டியான சைடிஷ்-யை நீங்கள் நிச்சயம் ஒருமுறை முயற்சிக்கலாம்.
இந்த சைடிஷ்சை எப்படி செய்து அசத்தலாம் என்று சமையல் கலை வல்லுநரான செஃப் வெங்கடேஷ் பட் எளிய குறிப்புகளை தனது யூடியூப் சேனலில் வழங்கி இருக்கிறார். அதனை இங்கு பார்த்து, செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எண்ணெய் கத்தரிக்காய் செய்து அசத்துவோம்.
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எண்ணெய் கத்தரிக்காய் - தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/2 கிலோ (20 - 22)
பேஸ்ட் தயாரிக்க
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன் (வறுத்து தோல் உரித்தது)
மல்லி விதை - 5 டீஸ்பூன்
வெள்ளை எள் - 3 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
மசாலா தயாரிக்க
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 6
கடுகு - 1 டீஸ்பூன்
பூண்டு - ஒரு கைப்பிடி (உரித்தது - விருப்பம் உள்ளவர்கள்)
சின்ன வெங்காயம் - 150 கிராம் (உரித்தது - விருப்பம் உள்ளவர்கள்)
கருவேப்பிலை - 1/2 கட்டு
தக்காளி - 5 ( மிக்சியில் அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
புளி - 75 கிராம் (தண்ணீரில் கரைத்தது)
தண்ணீர் - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 30 கிராம்
பெருங்காயம் பொடி - 1 டீஸ்பூன்
செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எண்ணெய் கத்தரிக்காய் - நீங்கள் செய்ய வேண்டியவை
எண்ணெய் கத்தரிக்காய் தயார் செய்யும் முன் அவற்றுக்கு ஏற்ற மசாலாவை முதலில் தயார் செய்து கொள்ளலாம். அதற்கு, ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் சூடேற்றவும். பிறகு அதில் வெந்தயம் சேர்த்து வறுக்கவும். அவை ஓரளவுக்கு வறுபட்டதும், அவற்றுடன் கடலை பருப்பு, வேர்க்கடலை மல்லி விதை சேர்த்து வறுக்கவும்.
இதன்பின்னர், வெள்ளை எள் சேர்த்து அவை பொரிந்து வந்தவுடன், அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். இந்த கலவையை ஒரு தட்டில் போட்டு நன்கு ஆற வைத்து விடவும். அவை ஆறியதும், மிக்சியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு, கத்தரிக்காய்களை எடுத்து அதன் காம்பில் பாதியை மட்டும் வெட்டி விடவும். பின்னர், கத்தரிக்காய்களை நான்கு பாகமாக கீறி வெட்டிக் கொள்ளவும்.
இந்த கத்தரிக்காய்களை சூடேற்றியுள்ள எண்ணெயில் போட்டு வதக்கவும். சுமார் 15 நிமிடங்களுக்கு கத்தரிக்காய் அடி பிடிக்காத அளவுக்கு நன்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், தாளிக்கும் அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதில், வர மிளகாய், கடுகு சேர்க்கவும். இவை பொரிந்து வந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர், அவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அவை நன்கு வதங்கியதும் கருவேப்பிலை சேர்க்கவும்.
தொடர்ந்து, வதங்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலையுடன் தக்காளி பேஸ்ட் சேர்க்கவும். பிறகு, மஞ்சள் தூள், மல்லித்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். இவற்றை 2 நிமிடங்களுக்கு சமைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அப்படியே சேர்க்கவும். இவை ஒரு கொதி வந்த பிறகு, புளி தண்ணீர் சேர்க்கவும். இவற்றுடன் தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். அவை கொதிக்கும் போது, அவற்றுக்கு தேவையான அளவு உப்பு, வெல்லம் சேர்க்கவும். அவை சுண்டி வந்ததும், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சேர்க்கவும்.
இந்த கலவையை நன்கு கலந்து விட்ட பிறகு, அதில் பெருங்காயம் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும். இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு அடுத்த 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஏற்கனவே கொதிக்கும் போது அதிகமாக சுண்டி இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கிரேவியாக வரும் வரை கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும், அவற்றின் மேல் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு கீழே இறக்கினால், டேஸ்டியான எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.
இந்த எண்ணெய் கத்தரிக்காய் சைடிஷ்சை பாத்திரத்தில் அடைத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து, தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடேற்றி சாப்பிட்டு வரலாம். இவை இட்லி, தோசை, சாதம், தயிர் சாதம் என அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். இவற்றை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிட்டு ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.