/indian-express-tamil/media/media_files/60Eij1htgFsKgedwyyo4.jpg)
உணவுப் பிரியர்களுக்கு போண்டா என்றால் ஒரு தனி பிரியம் உண்டு. அதிலும் மாலை நேரத்து தேநீருடன் சூடான, மொறுமொறுப்பான போண்டா கிடைத்தால், அந்த நாளே அமர்க்களம் தான். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பலரும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டியிருக்கும். அதற்காக இனி போண்டாவை சுவைக்கவே முடியாதா? என்று கவலை வேண்டாம். இங்கே சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து, அனைவரும் சாப்பிடக்கூடிய, சற்று ஆரோக்கியமான ஒரு போண்டா ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
வேர்க்கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு
மிளகாய்த்தூள்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை மண் போக நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு, அதன் தோலை சீவி நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். சுமார் 1 கப் துருவலுக்கு 1/4 கப் என்ற விகிதத்தில் வேர்க்கடலை மாவை சேர்க்கவும். (வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் இருப்பதால் இது சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது). இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, தேவையான உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் 1 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். அரிசி மாவு போண்டாவுக்கு மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கிலேயே ஈரம் இருக்கும் என்பதால், பொதுவாகத் தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும், மாவு உருட்டும் அளவிற்கு கெட்டியாக இல்லாவிட்டால், மிகச் சிறிதளவு மட்டும் தண்ணீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவு தளர்ந்து விடாமல் கவனமாகப் பிசையவும். பிசைந்த மாவை எடுத்து, சிறிய எலுமிச்சை அளவுள்ள குட்டி உருண்டைகளாக உருட்டி தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தீயை மிதமான அளவிற்கு குறைத்துக் கொள்ளவும்.
உருட்டி வைத்த போண்டாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொறுமையாகப் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் பொரிக்கும்போது போண்டாவின் உள்பகுதி நன்கு வேகும். போண்டாக்கள் பொன்னிறமாக மாறியதும், எண்ணெயில் இருந்து எடுத்து தனியே வைக்கவும். இப்போது, சர்க்கரை நோயாளிகளும் மிதமாகச் சாப்பிடக்கூடிய, சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு போண்டா தயார். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்தும், குறைந்த கிளைசெமிக் குறியீடும் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஓரளவிற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இதில் பொரித்தெடுப்பதால் மிதமாக எடுத்துக்கொள்வது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us