கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள், ஒரு முருங்கை மரமும், ஒரு கறவல் பசுவும் இருந்தால் போதும் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும் என்று கூறுவார்கள். ஏனென்றால், முருங்கை மரத்தில் இருந்து சாப்பிடுவதற்கு காய், கீரை கிடைக்கும், பசுவின் பால் மூலம் வருமானம் கிடைக்கும்.
இந்த முருங்கையில் எல்லா பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. முருங்கைக் கீரை, முருங்கைக் காய் ஆரோக்கியமானது. முருங்கைக் கீரையைப் போல, காய்ந்த முருங்கைக் காயின் விதை மிகவும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
முருங்கைக் காயை மரத்தில் இருந்து பறிக்காமல் விட்டுவிட்டால், அது நாளடைவில் காய்ந்து குச்சியாகிவிடும். அந்த காய்ந்த முருங்கைக் காயை உடைத்து அதில் இருக்கும் முருங்கை விதைகளை மேல் ஓடு நீக்கி அதில் உள்ள பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது அந்த முருங்கை விதையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். முருங்கை விதையை வறுத்து சாப்பிடலாம் அல்லது முருங்கை விதையை வெந்நீரில் கொதிக்க வைத்து சாப்பிடலாம் அல்லது முருங்கை விதையைக் கொண்டு தேநீர் தயாரித்து சாப்பிடலாம். இந்த முருங்கை விதையில் நிறைய ஆரோக்கிய நன்மைகள், மருத்துவப் பலன்கள் இருப்பதாக டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இந்த முருங்கை விதை நம்முடைய தோல்களுக்கு, முடிகளுக்கு போஷாக்குகளைத் தருகின்றன, இந்த முருங்கை விதையை ரத்தம் அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடலாம். முருங்கை விதையை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறையும், ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும், நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும், கெட்ட கொழுப்பு அளவு குறையும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
அதே போல, இந்த முருங்கை விதை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம். முருங்கை விதை சாப்பிட்டால், இன்சுலினை அதிகப்படுத்தும். இன்சுலின் வேலை செய்யவும் குளுகோஸ் எரிக்கப்படுவதற்கு இந்த முருங்கை விதை சாப்பிட்டால் உதவும்.
கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு காரணமான ஆக்சிடேட்டிவ் டிரஸ்ஸை இந்த முருங்கை விதைகள் குறைக்கின்றன என்று முருங்கை விதையில் உள்ள நயாஜிமிசின் என்ற பொருள் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். அதே போல, ஜீரண மண்டலத்தில் எந்த பிரச்னை இருந்தாலும், இந்த முருங்கை விதை சாப்பிட்டால் சரி செய்யும் என்கிறார்.
முருங்கை விதை சாப்பிட்டால், நன்றாகத் தூக்கம் வரும், ஆஸ்த்மா அட்டாக்கை தடுக்கும், நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும், ஆண்மை விரைப்புத் தன்மையை அதிகரிக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். இவ்வளவு நன்மைகள் கொண்ட முருங்கை விதையை அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு நாளைக்கு 5 முருங்கை விதைகள் எடுத்துக்கொண்டால் போதும், மேலே கூறப்பட்ட எல்லா ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.