ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் செய்வது போல, புதினா சட்னி எப்படி செய்வது என்று பிரபல சமையல் கலைஞர் செஃப் தீனா செய்து காட்டியுள்ளார். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்டலில் புதினா சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்டலில் புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு 1 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
புதினா 400 கிராம்
புளி எலுமிச்சை அளவு
கருவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி 50 கிராம்
தேங்காய் 100 கிராம்
நல்லெண்ணெய் தேவையான அளவு
உளுத்தம் பருப்பு 300 கிராம்
பச்சை மிளகாய் 6
சின்ன வெங்காயம் 100 கிராம்
கொத்தமல்லி 100 கிராம்
பூண்டு 10 பல்லு
செய்முறை:
ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி வையுங்கள். தண்ணீர் கொதித்து வரும்போது, அதில் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ல புதினாவைப் போடுங்கள், அதே போல கொத்தமல்லி இலையையும் போடுங்கள், 3 மிளகாய் போடுங்கள், இஞ்சி துண்டுகள் 4, பூண்டு 4 பல்லு போடுங்கள். தண்ணீர் கொதிக்கக் கூடாது. தண்ணீர் கொதித்தால் கலர் வராது. உடனடியாக அவற்றை வெளியே எடுத்து சில்லென இருக்கும் ஐஸ் தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, இன்னொரு பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வையுங்கள். அதில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றுங்கள். அதில் கடலைப் பருப்பு போடுங்கள். அடுத்து உளுத்தம் பருப்பு போடுங்கள், அடுத்து காய்ந்த மிளகாய் போடுங்கள், கருவேப்பிலை கொஞ்சம் போடுங்கள். தீயை சிம்மில் வைத்து மெதுவாக வறுக்க வேண்டும். வெங்காயம் போடுங்கள், அடுத்து பூண்டு 6 பல்லு சேருங்கள், இஞ்சி 6 துண்டுகள் போடுங்கள், பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றாற்போல் போடுங்கள், 3 அல்லது 4 பச்சை மிளகாய் போடுங்கள். இப்போது லேசாக வதக்குங்கள். ஏற்கெனவே சொன்ன அளவு புளி போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள், அடுத்து தேங்காய் போடுங்கள். நன்றாக வதங்கியதும் ஐஸ் தண்ணீரில் போட்டு வைத்துள்ள புதினா, கொத்தமல்லியை எடுத்துப் போடுங்கள். லேசாக கலந்துவிட்டு எடுத்துவிடுங்கள்.
அதை மிக்சியில் போட்டு அரைத்தால் புதினா சட்னி ரெடி. இதற்கு தாளிப்பு செய்ய வேண்டும், அதனால், ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய வையுங்கள், அதில் கடுகு போடுங்கள், கடுகு பொரிந்ததும், காய்ந்த மிளகாய் போடுங்கள், கருவேப்பிலை போடுங்கள், பொரிந்து வரும் நேரத்தில் கொஞ்சம் உளுந்து போடுங்கள். நன்றாகப் பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள புதினா சட்னியில் இந்த தாளிப்பை சேருங்கள். அவ்வளவுதான், லைட் கிரீன் கலரில் புதினா சட்னி சூப்பராக இருக்கும். இந்த புதினா சட்னியில் தேங்காய் சேர்த்தால் 1 நாள் மட்டுமே ஃபிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். தேங்காய் சேர்க்காவிட்டால் 3 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம் செம சுவையாக இருக்கும்.