நம்மில் பலருக்கு ஹோட்டல்களில் சாப்பிடும்போது காலை டிபனுக்கு இட்லியுடன் ரவா கேசரியும் வேண்டும். சில வீடுகளில் அடிக்கடி செய்து சாப்பிடுவர். அதேநேரம், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற விழாக்காலங்களில் பந்தியில் தவறாமல் இடம்பிடிப்பது இந்த கேசரி தான். இந்தக் கேசரியில் தற்போது கூடுதல் சேர்க்கைகள் மூலம் பல வெரைட்டிகள் வந்தாலும், பாரம்பரிய கேசரிக்கு தனி ருசிதான்.
Advertisment
ஆனால் அதனை சரி பக்குவத்தில் செய்ய வேண்டும். இல்லை என்றால் ருசி நன்றாக இருக்காது. டேஸ்டியான கேசரி செய்ய நெய், ரவா, சர்க்கரை மற்றும் தண்ணீரை சரியான விகிதத்தில் சேர்ப்பது முக்கியம். இந்த விகிதத்தை பொம்மிஸ் குக்கரி வேர்ல்டு என்ற யூடியூப் சேனல் வீடியோ விளக்குகிறது. இப்போது அந்த டேஸ்டி ரவா கேசரி ரெசிபியை தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெய் – 1 கப்
ரவா – 2 கப்
சர்க்கரை – 3 கப்
சூடான நீர் – 4 கப்
முந்திரி பருப்பு – அரை கைப்பிடி அளவு
காய்ந்த திராட்சை – 2 டேபிள் ஸ்பூன் அளவு
ஏலக்காய் – 3
உப்பு – 2 சிட்டிகை
செய்முறை
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து சூடேறியதும், நெய் ஊற்றவும். நெய் நன்றாக உருகியதும் அதில் முந்திரி மற்றும் காய்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மீதம் இருக்கும் நெய்யில் ரவா சேர்த்து இளஞ்சூட்டில் வறுக்கவும். பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் சர்க்கரை, உப்பு மற்றும் ஏலக்காயை இடித்து சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். நன்றாக கலந்தப் பின்னர் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். தேவைப்படின் கேசரி பவுடர் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை அப்படியே 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மூடி வைத்து வேக விட வேண்டும். பின்னர் வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி விட வேண்டும்.
அவ்வளவு தான் டேஸ்டியான ரவா கேசரி ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“