பப்பாளி இலைகளின் தன்மைக்காக அதனை பாரம்பரிய மருத்துவ முறையில் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் மருத்துவர் பிரணவ் சீனிவாசன் மற்றும் உணவியல் நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா ஆகியோர், பப்பாளி இலைகளை உட்கொள்ளும் போது கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Four surprising reasons you should consume papaya leaves
அதன்படி, பப்பாளி இலைகளில் இரத்த தட்டையணுக்களை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்ததாக மருத்துவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலின் போது இரத்த தட்டையணுக்கள் குறையும் நிலையில், பப்பாளி இலைகளை சாறாக எடுத்து நோயாளிகளுக்கு வழங்குகின்றனர். இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதேபோல், பப்பாளி இலையில் இருக்கக் கூடிய பப்பைன், புரதத்தை உடைத்து செரிமானத்திற்கு உதவி செய்கிறது என மருத்துவச் சீனிவாசன் குறிப்பிடுகிறார். மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் பப்பாளி இலைகள் பயன்படுகின்றன.
அதிகபட்ச செயல்திறனுக்காக பப்பாளி இலைகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?
"பப்பாளி இலையில் இருந்து சாறு எடுத்து அல்லது தேநீராக அருந்தலாம். இதில் இருக்கும் ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஆகியவை இரத்த தட்டையணுக்களை அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் இது வலுப்படுத்துகிறது. இதனை தேநீராக அருந்தும் போது செரிமான மண்டலம் சீராகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது மருந்தாக வழங்கப்படுகிறது. எனவே, அதிகமான தயாரிப்பு நிலைக்கு இதனை கொண்டு செல்லாமல், பயன்படுத்தலாம்" என மல்ஹோத்ரா அறிவுறுத்துகிறார்.
எனினும், பப்பாளி இலைகளை பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கன்னிகா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அதன்படி, "மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்ற பின்னர் தான் பப்பாளி இலைகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் இதனை நேரடியாக எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். மேலும், குறைவான அளவு பப்பாளி இலை சாறு குடித்த பின்னர் ஒவ்வாமை ஏதேனும் ஏற்படுகிறதா என சோதித்து பார்க்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் பப்பாளி இலைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பப்பாளி இலைகளை டெங்கு போன்ற பிரச்சனைகளுக்கு துணை மருந்தாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதனை மட்டுமே மருந்தாக பயன்படுத்த கூடாது. முறையான வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே இது போன்ற பொருட்களை உபயோகிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
"மருத்துவரை ஆலோசித்த பின்னர் தான் பப்பாளி இலைகளை பயன்படுத்த வேண்டும். இவற்றை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்படக் கூடும்" என மருத்துவர் சீனிவாசன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.