நெல்லிக்காய், கொத்தமல்லி இரண்டிலும் மருத்துவ நன்மைகள் உள்ளன. நெல்லிக்காய் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் என பலருக்கும் தெரியும். நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். அதேபோல் கொத்தமல்லி வாயு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். இவ்விரண்டையும் சேர்த்து உணவு செய்தால் 2 நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10
கொத்தமல்லித்தழை – 1 கப்
கறிவேப்பிலை – ¼ கப்
பச்சை மிளகாய் – 7
இஞ்சி – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ¼ கப்
கடுகு – ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கி சுத்தம் செய்து எடுக்கவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
மிதமான தீயில் நன்றாக வதக்கவும். பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின், அடுப்பை அணைத்து இறக்கவும். கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து இறக்கவும். இப்போது இதை கலவையில் கொட்டிக் கிளறவும். அவ்வளவு தான் ‘நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி’ ரெடி.