வல்லாரை கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அற்புத மூலிகை. ஞாபக சக்தியை அதிகரிப்பது முதல் தோல் நோய்களை குணப்படுத்துவது வரை பல்வேறு நன்மைகளை இது கொண்டுள்ளது. இன்று நாம் இந்த வல்லாரை கீரையை வைத்து சுவையான மற்றும் சத்தான கடையல் எப்படி செய்வது என்று கிராமத்து கைமணம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
முதலில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். தக்காளி மசிந்ததும், சுத்தம் செய்த வல்லாரை கீரையைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கீரை சுருங்கி வரும் வரை வதக்கினால் போதும்.
வதக்கிய கீரையுடன் வேக வைத்த பருப்பை மசித்து ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் சாம்பார் பொடி (விரும்பினால்) சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயை மூடி, மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த பிறகு, தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கடையலில் ஊற்றலாம்.