குஜராத்தி ஹாண்ட்வோ என்பது பாரம்பரிய மற்றும் சத்தான சிற்றுண்டி ஆகும். இதனை செட்டிநாடு ஸ்டைலில் மசாலாக்கள் சேர்த்து எப்படி பணியாரம் போன்று சுடலாம் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது உங்கள் மாலை நேர ஸ்நாக்ஸ்-க்கு ஏற்றதாக இருக்கும். இதற்கான ரெசிபியை தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்,
பாசிப்பயறு - 1 கப்,
உளுந்து - 1/4 கப்,
துவரம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 5,
பச்சை மிளகாய் - 1,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன் மற்றும்
கேரட், பீன்ஸ் போன்ற விருப்பமான காய்கறிகள்.
செய்முறை:
முதலில், பச்சரிசி, பாசிப்பயறு, உளுந்து, துவரம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி, குறைந்தது 4-5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசிக் கலவையுடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, சற்று கெட்டியான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இது தோசை மாவு பதத்தை விட சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி, புளிக்க வைக்க இரவு முழுவதும் அப்படியே விடவும். இவ்வாறு செய்தால் மாவு நன்கு புளித்து, லேசாக உப்பி வந்திருக்கும். இல்லையென்றால், மாவை அரைத்தவுடன், 1/4 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். இது மாவை உடனடியாக புளிக்க வைக்கும்.
புளித்த மாவுடன் நீங்கள் விரும்பும் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை துருவி சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இது ஹாண்ட்வோ பைட்ஸ்க்கு கூடுதல் சுவையையும், சத்தையும் கொடுக்கும். இனி, இந்த மாவை பணியாரக் கல்லில் சூட்டு எடுத்தால் சுவையான குஜராத்தி ஹாண்ட்வோ தயாராக இருக்கும்.