உணவு ஆரோக்கியம் மிகவும் முக்கியம். சத்தான உணவுகள் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும். மூன்று வேளை உணவு சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவு வகைகள் கொடுக்க வேண்டும். அந்தவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கொண்டைக்கடலை சாலட் செய்வது குறித்து பார்க்கலாம். கொண்டைக்கடலையை வெறுமனே வேகவைத்து உப்பு சேர்த்து சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். இருப்பினும் சாலட் செய்து சாப்பிடுவது காரத்தோடு சுவையாக இருக்கும்.
கொண்டைக்கடலை அவகோடா சாலட்
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
வெள்ளரிக்காய் - 1/2 கப் (துண்டுதுண்டாக நறுக்கியது)
தக்காளி - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)
அவகோடா - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப்
கொத்தமல்லி - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை இதனுடன் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அவகோடா பழ துண்டுகளையும் சேர்த்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி, இறுதியாக எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
கொண்டக்கடலை தக்காளி வெள்ளரிக்காய் சாலட்
கொண்டைக்கடலை - 1 கப்
தக்காளி -1 (துண்டுதுண்டாக நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலக்கவும். நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதல் சுவையாக கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்
கொண்டைக்கடலை பாலக்கீரை சாலட்
கொண்டைக்கடலை-1 கப்
பாலக்கீரை - 1/2 கப் (துண்டுதுண்டாக நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 1 (துண்டுதுண்டாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் விதைகள் - தேவையான அளவு
செய்முறை
ஊறி வைத்த கொண்டைக்கடலையை எடுத்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து கலக்கவும். பின் தேன், எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
இப்போது தேவைக்கேற்ப சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். காரம் தேவையென்றால் மிளகாய் விதைகளை தூவி விடலாம். அளவான காரத்துடன் சுவையாக சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil