கொண்டைக் கடலையில் (சுண்டல்) அதிக சத்து நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும். முளைக்கட்டிய சுண்டலில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
கொண்டைக் கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை ரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும். மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இங்கு கொண்டைக் கடலையில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொண்டக் கடலை - 1 கப் (250 மி.லி)
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 /2 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கொண்டைக் கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற விடவும். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும். இப்போது மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் ஊற வைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி. வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். பின் இந்த கலவையை 12 மணி நேரம் வரை புளிக்கவிடவும்.
அடுத்து இந்த கலவையில் தேவையான அளவு தோசை மாவு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்துவிடவும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும். சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிட சுவையான கொண்டைக் கடலை தோசை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“