சாப்பிடும்போது பலரும் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், அந்த கருவேப்பிலையில்தான் இரும்புச் சத்து உள்ளது என்று கூறுகிறார்கள். கருவேப்பிலை புடிக்காது என்று கூறுபவர்களும், கருவேப்பிலையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்கும் இப்படி செய்தால் செம்ம சுவையாக இருக்கும். அதுமட்டுமல்ல சப்பாத்திக்கு செம்ம சைட் டிஷ்ஷாக இப்படி பண்ணுங்க, செலவே இல்லாமல் இருப்புச் சத்தும் கிடைக்கும்.
செய்முறை:
முதலில் 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து நன்றாகக் கழுவிட்டு ஈரம் இல்லாமல் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, ஸ்டவ்வை பற்றவைத்துவிட்டு ஒரு கடாயை வையுங்கள், அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சமையல் எண்ணெய் ஊற்றுங்கள். பிறகு, தயார் செய்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை கடாயில் போடுங்கள். ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து, கருவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, அதே கடாயில், 2 டேபிள்ஸ்பூன் அளவு சமையல் எண்ணெய் ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்ததும், உளுந்து 1 டேபிள்ஸ்பூன் போடுங்கள், அடுத்து அதில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிப் போடுங்கள். பூண்டு 10 பல்லு போடுங்கள். நன்றாக வதக்குங்கள். அடுத்து 2 தக்காளியை பொடியாக நறுக்கிப் போடுங்கள். அதனுடன் காரத்துக்காக 6 பச்சை மிளகாய் போடுங்கள். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
நன்றாக வதங்கிய பிறகு, அதை எடுத்து ஆற வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, இதனுடன், ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள வறுத்த கருவேப்பிலையை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைடத்துக்கொள்ளுங்கள். உப்பு இல்லை என்றால் உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்காக, கொஞ்சம் சமையல் எண்ணெய், கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கலக்கிவிட்டால், சூப்பரான கருவேப்பிலை சட்னி தயார்.
இந்த கருவேப்பிலை சட்னி இட்லி தோசை, சப்பாத்திக்கு செம சைட் டிஷ்ஷாக இருக்கும். அதே நேரத்தில் செலவே இல்லாமல் இரும்புச் சத்து கிடைக்கும். உங்கள் வீட்டில் இந்த கருவேப்பிலை டிஷ்ஷை செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“