பள்ளி முடிந்து சோர்வாகவரும் பிள்ளைகள் மிகவும் சுவையாகவும் சத்தாகவும் சாப்பிடக்கூடிய வகையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை செய்வது மிகவும் சுலபம் பிள்ளைகளுக்கு சிறிது நேரத்திற்கு பசி ஆறும். இதை எப்படி செய்வது என்று ஃபூடிதமிழா இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
செய்முறை:
ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் (சேர்ப்பதாக இருந்தால்) சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இப்போது வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்களை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். காரம் மற்றும் மசாலா நிறைந்த ஸ்வீட்கார்ன் சாட் தயார். குழந்தைகளுக்கு கொடுப்பதால் கொஞ்சம் காரம் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.
கார்ன் வேகவைக்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்தால் சுவை கூடும். சாட் மசாலா சேர்ப்பது சாட்டிற்கு ஒரு தனி சுவையைக் கொடுக்கும். உங்களிடம் சாட் மசாலா இல்லையென்றால், மாங்காய் தூள் சிறிது சேர்க்கலாம். காரத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டலாம் அல்லது குறைக்கலாம். சிலர் வதக்கும் போது சிறிது சீரகம் அல்லது பெருங்காயம் சேர்ப்பார்கள், அதுவும் ஒரு நல்ல சுவையைக் கொடுக்கும்.