மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் பசியுடன் சோர்வாக காணப்படுவார்கள். அவர்களுக்கு சுவையான உணவு கொடுக்கும் அதே வேளையில், அது சத்தாக இருப்பது அவசியம். அந்த வகையில், மசாலா சுண்டல் எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொண்டை கடலை,
தண்ணீர்,
உப்பு,
துருவிய தேங்காய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
வரமிளகாய்,
தேங்காய் எண்ணெய்,
கடுகு,
வெங்காயம்,
பெருங்காயத்தூள்,
கேரட் மற்றும்
எலுமிச்சை சாறு.
செய்முறை:
கருப்பு கொண்டை கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், இத்துடன் சேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
இனி, 5 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், ஒரு கொத்து கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இனி, அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், வேக வைத்த சுண்டலை இதில் சேர்க்கலாம்.
இதன் பச்சை வாசனை நீங்கிய பின்னர் அரைத்து வைத்த மசாலா, துருவிய கேரட், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான மசாலா சுண்டல் ரெடியாகி விடும்.