பள்ளி செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகம் செல்வபர்களுக்கோ லஞ்ச் பாக்ஸில் என்ன சமைத்து அனுப்புவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக, சத்தான மற்றும் சுவையான பச்சைப்பயறு சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது, மேலும் இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி/புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சைப்பயறு - 1/2 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
நெய்/எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
பச்சைப்பயறு மற்றும் அரிசியை தனித்தனியாக நன்கு கழுவி, சுமார் 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும். இது சமையல் நேரத்தைக் குறைக்கும். ஒரு குக்கரில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு, சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
ஊறவைத்த பச்சைப்பயறு மற்றும் அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் சேர்க்கவும். மசாலாவுடன் நன்கு கலக்கும்படி ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். குக்கரை மூடி, 2 முதல் 3 விசில் வரும் வரை அல்லது அரிசி மற்றும் பயறு நன்கு வெந்துவிடும் வரை சமைக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சாதத்தை மெதுவாக கிளறி விடவும். பச்சைப்பயறு சாதத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிர் பச்சடி, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
காரத்தை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். சாதம் மேலும் சுவையாக இருக்க, காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைத்து, நெய் அதிகம் சேர்த்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.