உப்புமா என்றாலே முகம் சுளித்து, வெளியிலேயே சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்பவர்கள் உங்கள் வீட்டில் இருக்கிறார்களா? அப்படியானால், இந்த காய்கறி சேர்த்த ரவா கிச்சடி செய்முறையை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஹோட்டல் சுவையில் தளதளவென்று இருக்கும் இந்த கிச்சடி, காலை உணவிற்கும், மாலை நேர சிற்றுண்டிக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாகும். இதை எப்படி செய்வது என்று மாலினிகிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை: 1 ¼ கப்
நெய்: 2 டீஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு: ½ டீஸ்பூன்
சோம்பு, ஏலக்காய், பட்டை
வெங்காயம்: 1
இஞ்சி: 1 இன்ச்
தக்காளி: 2
கேரட்: 1
பீன்ஸ்: 4-5
பச்சை மிளகாய்: 3-4
முந்திரி பருப்பு: 5-6
கல்லுப்பு: 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி: ½ டீஸ்பூன்
தண்ணீர்: 4 ½ கப்
மல்லித்தழை
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, ஒண்ணே கால் கப் ரவையை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு டீஸ்பூன் கல்லுப்பு மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் நாலரை கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து, தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
தண்ணீர் கொதித்ததும், வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி படாமல் கிளறவும். ரவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை மிதமான தீயில் கிளறவும். இந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியாக, நறுக்கிய மல்லித்தழை மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது சுட சுட ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி தயார்! தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாறினால், இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.