/indian-express-tamil/media/media_files/2025/06/07/cdVVMFC9Ncd2iYPElHxU.jpg)
இட்லி என்றாலே தென்னிந்தியர்களின் பிடித்தமான காலை உணவு. ஆனால், சிலருக்கு மிருதுவான இட்லி செய்வது சவாலாக இருக்கும். கடையின் இட்லி போல வீட்டிலேயே சாஃப்ட்டான இட்லி செய்ய ஒரு எளிய, ஆனால் பலன் தரும் செய்முறையை இங்கே காணலாம். இது இட்லிக்கு மாவு அரைக்கும் விகிதம் முதல் மாவை பதம் செய்வது வரை விரிவாக அன்னம் ரெசிப்பீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி: 6 கப் (குண்டு சாம்பார் அரிசி அல்லது 520 ரகம் பயன்படுத்தலாம்)
உளுந்து: 1 கப் (எந்த அளவும் எடுக்கலாம்)
உப்பு: தேவையான அளவு
தண்ணீர்: தேவையான அளவு
செய்முறை:
இரவு தூங்குவதற்கு முன், 6 கப் இட்லி அரிசியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியை நன்கு கழுவி, அது மூழ்கும் அளவுக்கு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். அதேபோல, ஒரு கப் உளுந்தை ஒரு தனி டப்பாவில் போட்டு, அதையும் நன்கு கழுவி, உளுந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊறிய அரிசி மற்றும் உளுந்தை மூடி போட்டு ஃபிரிட்ஜில் வைத்து இரவு முழுவதும் ஊற விடவும். ஃபிரிட்ஜில் வைப்பது புளிப்புத்தன்மையை கட்டுப்படுத்தி இட்லியை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
மறுநாள் காலை, ஃபிரிட்ஜில் இருந்து ஊறிய உளுந்து மற்றும் அரிசியை வெளியே எடுக்கவும். முதலில், உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். உளுந்தை அரைக்கும் போது, அதனுடன் ஊறவைத்த தண்ணீர் முழுவதையும் சேர்க்க வேண்டாம். சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, வெண்ணெய் போல மிருதுவாகவும் நுரை பொங்கவும் அரைக்க வேண்டும். மாவு எவ்வளவு வெண்ணெய் போல வருகிறதோ, அவ்வளவு இட்லி மிருதுவாக இருக்கும்.
உளுந்து மாவை அரைத்து முடித்தவுடன், அதே கிரைண்டரில் ஊறிய அரிசியை சேர்த்து, மிருதுவாக அரைக்கவும். இட்லி மாவுக்கு அரிசியை மிகவும் நைசாக அரைக்கத் தேவையில்லை; சற்று ரவை பதம் இருக்கலாம். அரிசி மாவு அரைக்கும்போது, அதனுடன் உளுந்து மாவை சேர்க்க வேண்டாம். தனித்தனியாக அரைத்து பின்னர் சேர்க்கலாம். அரிசி மாவும் அரைத்ததும், அதற்குத் தேவையான உப்பை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அரைத்த உளுந்து மாவையும், அரிசி மாவையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, கைவிடாமல் நன்கு கலக்கவும். மாவு இட்லி ஊற்றும் பதம் (இட்லி மாவு கன்சிஸ்டன்சி) இந்த மாதிரி இருக்க வேண்டும் – அதாவது, ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது, ரொம்பவும் நீர்த்துப் போயும் இருக்கக் கூடாது. சரியான பதத்தில் கலந்தால் மட்டுமே இட்லி மென்மையாகவும் பூப்போலவும் வரும். இந்த மாவை பயன்படுத்தி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தால், மிருதுவான ஹோட்டல் ஸ்டைல் இட்லி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.