உருளைக்கிழங்கில் பலவித ரெசிபிகள் செய்யலாம். குறிப்பாக இதில் ஸ்நாக்ஸ் செய்வது பலருக்கும் பிடிக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரென்ச் ப்ரைஸ், உருளைக்கிழங்கு போண்டா எனப் பலவற்றை வீட்டுலேயே செய்து சாப்பிடலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கு கொண்டு புதுவித ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்க்கலாம். உருளைக்கிழங்கு சில்லி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5
சோள மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 கப்
சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
பூண்டு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை கழுவி அதன் தோல்களை சீவி நீளமாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். சற்று தளர்வாக கலக்கவும். நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மாவு கலவையில் போட்டு எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கை போட்டு எடுக்கவும். பின்னர் மற்றொரு கடாய்யில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் குடை மிளகாய், சில்லி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், தக்காளி கெட்சப், மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அடுத்து அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும். கலவை திக்கான பதம் வந்ததும் பொரித்து எடுத்த உருளைக்கிழங்கை சேர்த்து எடுக்கவும். 1 முறை நன்கு கலந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சூடான, சூப்பரான சில்லி பொட்டேட்டோ ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“