கொள்ளுப் பருப்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கி உள்ளது.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதனால் உடல் எடை குறைப்பிற்கு கொள்ளு உதவியான இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொள்ளு கொண்டு துவையல், குழம்பு, ரசம் என பல்வேறு ரெசிபிகள் செய்யலாம். இங்கு கொள்ளு அடை தோசை செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 1 கப்
அரிசி – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
உடைத்த உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம்- 1 கப்
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய் உடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். மாவு அளவுக்கு ஏற்ப மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவு தான். இப்போது, தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும். இரு புறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil