பாரம்பரிய உணவுகளில் எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவற்றின் சுவை மட்டுமல்லாமல், ஆரோக்கிய நலன்களும் நம்மை வியக்க வைக்கும். அத்தகைய சிறப்புமிக்க உணவுதான் கொள்ளு துவையல். பொதுவாக, கொள்ளு என்பது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால், அந்த கொள்ளுவை எப்படி ருசியாக சமைப்பது என்பது பலருக்கும் தெரியாது. இட்லி, தோசை, சூடான சாதம் என அனைத்துக்கும் ஏற்ற இந்த கொள்ளு துவையல், சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். இதனை எளிமையான முறையில் எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/2 கப், நல்லெண்ணெய் - 1 + 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, பூண்டு - 4 பல், சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4 (அல்லது காரத்திற்கு ஏற்ப), பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை: முதலில், ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கொள்ளு சேர்த்து, பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, கொத்தமல்லி இலைகள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து ஆறவிடவும். முதலில், வறுத்த கொள்ளு-வை மட்டும் மிக்சியில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். பின்னர், வதக்கிய மற்ற பொருட்களையும், சிறிதளவு தண்ணீரும் சேர்த்து, துவையல் பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.
இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி சுவையான கொள்ளு துவையலை வீட்டிலேயே செய்து மகிழலாம். இந்த துவையல், உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கும்.