மாலையில் தேநீருடன் சாப்பிட அருமையான, விரைவாக செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டிதான் இந்த வெங்காய போண்டா. இதை சுவையாகவும் எளிதாகவும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த டீக்கடை வெங்காய போண்டாவை எப்படி செய்வது என்று மைசெல்ஃப்டைம் இன்ஸ்டா பக்கத்தில் செய்துகாட்டியுள்ளதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நடுத்தர அளவு வெங்காயம் - 2
உப்பு - 1/2 ஸ்பூன்
காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
செய்முறை:
முதலில், இரண்டு நடுத்தர அளவிலான வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, வெங்காயத்தை கையால் நன்றாக பிசையவும். இதனால் வெங்காயத்திலிருந்து தண்ணீர் வெளியேறும்.
பிறகு, ஒரு ஸ்பூன் காஷ்மீரி ரெட் சில்லி பவுடர், பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சோம்பு, மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். கால் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
அரை கப் கடலை மாவு மற்றும் கால் கப் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்திலேயே மாவை கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால், லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம்.
எண்ணெய் நன்றாக சூடானதும், மாவை இலகுவாக உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும், போண்டாவை எண்ணெயில் இருந்து எடுக்கவும். இப்போது சுவையான டீக்கடை வெங்காய போண்டா தயார். இதை பிள்ளைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள். விளையாடும் பிள்ளைகளுக்கு பசியை சிறிதுநேரம் அடக்கும்.