தமிழகத்தில் பல வீடுகளில் ரேஷன் அரிசியை இட்லி, தோசை செய்ய உபயோகப்படுத்தி வருகின்றனர். நீங்கள் இட்லி, தோசைக்கு ரேஷன் அரிசியைப் பயன்படுத்தி சாஃப்ட்டான இட்லி செய்வது ரொம்ப சுலபம். அதற்கு அரிசி, உளுந்து இந்த அளவில் எடுத்துக்கொண்டு இங்கே சொல்வது போல மாவு அரைத்து செய்து பாருங்கள் ரேஷன் அரிசியில் சுவையான சாஃப்ட் இட்லி வரும்.
ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்ய தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கலரிசி 8 டம்பளர்
ரேஷன் பச்சரிசி 4 டம்ளர்
உளுந்து 1 டம்பளர்
வெந்தயம் 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ரேஷன் புழுங்கலரிசி, பச்சரிசியை நன்ராக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு அரிசிகளையும் 2 3 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பிசுபிசுப்பு, ரேஷன் அரிசி வாசனை போகிற வரை நன்றாக கழுவிய பிறகு, அதில் தண்ணீர் ஊற்றி 2-3 மணி நேரம் ஊற வையுங்கள். அதிகம் ஊறினால், புளிச்ச வாசனை வரும். அதனால், 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
அதே போல, உளுந்தம் பருப்புடன் 1 டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து நன்றாகக் கழுவிய பிறகு, உளுந்தம் பருப்பை தனியாக ஊற வையுங்கள்.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு நன்றாக ஊறிய பிறகு, உங்கள் வீடுகளில் கிரைண்டரில் மாவு அரைக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜில் ஐஸ் தயாரித்து, அந்த ஐஸை மாவு அரைக்கும் தண்ணீருக்கு பயண்படுத்துங்கள். ஏனென்றால், கிரைண்டரில் மாவு அரைக்கும்போது நீண்ட நேரம் ஓடினால் கிரைண்டர் சூடாகும். அப்போது, மாவும் சூடாகும். இதனால், இட்லி ஊற்றும்போது கெட்டியாக வரும். அதனால், ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.
முதலில் உளுந்தம் பருப்பை நன்றாக நைஸாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ரேஷன் அரிசியை ஐஸ் தண்ணீர் பயன்படுத்தி நைஸாக அரைத்து வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் மாவை கையில் குழைத்துப் பார்க்கும்போது லேசாக நறநற என்று இருக்கும்படி மாவு அரைக்க வேண்டும்.
அடுத்து, அரைத்து வைத்த அரிசி மாவையும் உளுந்தம் பருப்பு மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு, நாளைக்கு நீங்கள் இட்லி ஊற்றுவதற்கு எவ்வளவு மாவு தேவையே அந்த அளவுக்கு மாவு தனியாக எடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சமையல் சோடா சேர்த்து கலக்கி மூடி வைத்துவிடுங்கள். அதே போல, மீதி உள்ள மாவையும் மூடி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்துக்குப் பிறகு, மாவு நன்றாக புளித்து வந்திருக்கும்.
இப்போது நீங்கள் வழக்கம் போல, இட்லி குண்டானில் மாவு ஊற்றி வெந்த பிறகு எடுத்தால் ரேஷன் அரிசியில் சுவையான சாஃப்ட் இட்லி வந்திருக்கும். ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்வது எவ்வளவு சுலபம் நீங்களே பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“