முன்னாடி நம் பாட்டி, தாத்தாகள், விறகடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டார்கள், பானையில் அரிசியை வேகவைத்து, அது வெந்ததும், வடித்தபிறகு தான் சாப்பிட்டு பழகினார்கள். அதனால் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.
Advertisment
ஆனால் இன்றைய பிஸியான வாழ்க்கைமுறையால், நம்மில் பலரும் உடனடி சமையலுக்காக குக்கரை தான் நம்பி இருக்கிறோம். அரிசியை கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்ததும், அதை சாப்பிட்டு, லஞ்ச் பாக்ஸில் அடைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பி விடுவோம்.
ஆனால் மருத்துவர்கள், சாப்பாட்டை வடித்துதான் சாப்பிடவேண்டும், அதேபோல பாலிஷ் செய்யப்படாத அரிசி தான் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று அறிவுறுத்துகின்றனர்.
அந்தவகையில் சீக்கிரம் வேகாத பாலிஷ் செய்யப்படாத அரிசியை எப்படி குக்கரில் வேகவைத்து வடிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்!
பாலிஷ் செய்யப்படாத அரிசி தான் ஆரோக்கியத்துக்கு நல்லது
இதற்கு நீங்கள் எந்த அரிசி வேண்டுமானாலும் எடுக்கலாம். முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து நன்கு கழுவி, சுடுதண்ணீரில் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இப்போது அந்த அரிசியை குக்கரில் போடவும், நீங்கள் எப்போதும் வடிக்கும்போது எந்தளவுக்கு தண்ணீர் சேர்ப்பீர்களோ, அதே அளவு தண்ணீர் சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 5 விசில் விட்டு குக்கரை அனைத்துவிடவும்.
அதிக தண்ணீர் சேர்த்ததால் சாதம், கொஞ்சம் தண்ணீருடன் பாதி வெந்தநிலையில் இருக்கும். அப்படியே மீண்டும் அடுப்பில் கொதிக்கவிட்டு, சாதம் வெந்ததும் எப்போதும் போல வடிக்கவும். இப்போது சாதம் பூ போல வெந்திருக்கும். நிறைய நேரம் வேகக் கூடிய அரிசி எதுவாக இருந்தாலும், இதேபோல குக்கரில் வேகவைத்து மறுபடி கொதிக்கவிட்டால், 10 நிமிடத்தில் சாதம் ரெடியாகிவிடும்.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“