/indian-express-tamil/media/media_files/2025/06/28/doctor-manivannan-2025-06-28-15-58-17.jpg)
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என்றாலும், அது இயல்பை விடக் குறைவாக செல்வது ஆபத்தானது என்று மருத்துவர் மணிவண்ணன் கூறுகிறார். இது குறித்த பல்வேறு தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தால் அது "லோ சுகர்" என்று அழைக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறார். வெறும் வயிற்றில் எடுக்கும் சர்க்கரையின் அளவு 80 முதல் 120 இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இதன் அளவு 80 முதல் 180 இருக்க வேண்டும். ஆனால், 70-க்கு குறைவாக இதன் அளவு வந்தால் "லோ சுகர்" ஆகும். இதனை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருந்தால் ஒருவருக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளை மருத்துவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி சோர்வு, படபடப்பு, அதிகமான வியர்வை, தலைச்சுற்றல், பசி அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிக்கு ஏன் குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை அவர் குறிப்பிடுகிறார். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாதது, அதிகப்படியான இன்சுலின் அல்லது மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, வழக்கத்திற்கு மாறான அதிக உடற்பயிற்சி போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.
குறைந்த இரத்த சர்க்கரை ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியமான முதலுதவி நடவடிக்கைகளை மருத்துவர் மணிவண்ணன் கூறியுள்ளார். இதற்காக ஒரு ஸ்பூன் சர்க்கரையை உடனடியாக உட்கொள்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும் என அவர் வலியுறுத்துகிறார். மேலும், சரியான நேரத்தில் உணவு உண்பது மற்றும் மருந்தை முறையாகக் கையாள்வது போன்றவை குறைந்த இரத்த சர்க்கரை அளவை தடுப்பதற்கான வழிகள் என அவர் பகிர்ந்து கொள்கிறார்.
இதற்காக காலையில் 8:30 மணிக்கும், மதியம் 12:30 முதல் 1 மணிக்கும், மாலை 4:30 முதல் 5 மணிக்கும், இரவில் 8 முதல் 8:30 மணிக்கும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனவே, லோ சுகர் ஏற்படும் போது இவற்றை மேற்கொள்ளலாம். எனினும், தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களுடைய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.