ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்வது எப்படி என்று இங்கே உங்களுக்கு பயனுள்ள குறிப்புகளைத் தருகிறோம். ரேஷன் அரிசியில் இட்லி செய்தால் சாஃப்ட்டாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு உளுந்து அதிக நேரம் ஊற வைக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இப்போது ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
முப்போகம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் வீட்டில்கூட ரேஷன் அரிசிதான் உணவாக இருக்கிறது. ரேஷன் அரிசி என்றால், தரமில்லாத அரிசி என்று தவறாக நினைக்க வேண்டாம். நமது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் விநியோக முறையின் காரணமாகவெ ரேஷன் அரிசி நுகர்வோர்களுக்கு சென்று சேர்வதற்குள் அது ரொம்ப பழைய அரிசியாகி விடுகிறது. மற்றபடி, சில நேரங்களில் ரேஷனில் நல்ல அரிசியும் வருகிறது.
அந்த வகையில், பலரும் தங்கள் வீடுகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தி இட்லி, தோசை செய்கிறார்கள். ரேஷன் அரிசியில் இட்லி செய்யும்போது, சில நேரங்களில் இட்லி கல்லு மாதிரி கெட்டியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு ரேஷன் அரிசி காரணம் இல்லை. நீங்கள் இட்லி செய்யும் முறைதான் காரணம். அதனால், ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்யும் முறையை உங்களுக்காக இங்கே தருகிறோம்.
ரேஷன் புழுங்கல் அரிசி 3 கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதே போல, ரேஷன் பச்சரிசி 3 கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு அரிசியையும் ஒன்றாக சேர்த்து 6 மணி நேரம் நன்றாக ஊறவையுங்கள். பிறகு நன்றாகக் கழுவுங்கள். ரேஷன் அரிசியைப் பொறுத்தவரை ஊறவைத்தபின் கழுவுவது நல்லது.
அடுத்து, உளுந்து ஊறவைக்க வேண்டும். இந்த உளுந்து ஊறவைப்பது என்பது அரைப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்னதாக ஊற வைக்க வேண்டும். நீண்ட நேரம் உளுந்து ஊற வைக்கக் கூடாது. அரை மணி நேரம் ஊறினால் போதும். 6 கிளாஸ் அரசிக்கு 1 கிளாஸ் உளுந்து எடுத்து ஊற வையுங்கள்.
முதலில் அரிசியை மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, அரிசியை அரைக்கும்போது, ஐஸ் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், கிரைண்டர் சூடாகி மாவு சூடாகாமல் நன்றாக இருக்கும்.
அதே போல, அடுத்து உளுந்து அரை மணிநேரம் மட்டுமே ஊறவைத்து அரையுங்கள். உளுந்து அரைக்கும்போது, ஐஸ் தண்ணீர் தெளித்து அரையுங்கள். நன்றாக நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து 2 நிமிடங்கள் லேசாக அரைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் அரிசி மாவும் உளுந்து மாவும் நன்றாகக் கலக்கும்.
அவ்வளவுதான் மாவு தயார். இப்போது இந்த மாவை 7 மணி நேரம் மூடி புளிக்க வையுங்கள். மாவு புளித்த பிறகு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கிவிடுங்கள். அடுத்து, இட்லி குண்டானில் முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து தயார் செய்துகொள்ளுங்கள். அடுத்து, இட்லி தட்டில் நல்ல துணி போட்டு இட்லி மாவை ஊற்றி மூடி வைத்து அவித்தால், சாஃப்ட்டான இட்லி கிடைக்கு. அவ்வளவுதான், ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.