மாதுளை பழத்தின் நன்மைகள் குறித்தும், ஃபைபர் சத்து வேண்டும் என்றால் மாதுளையை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மாதுளை பழத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது, எதற்காக இந்த அளவுக்கு பயன்தரக் கூடியது என்று பேசுகிறார்கள் என்றால், மாதுளை அதிகப்பட்ச இரும்புச் சத்து தரக்கூடிய பழம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.
இன்றைய காலத்தில் நிறைய பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையாக இருக்கக்கூடிய நோய் ரத்தசோகை ஆகும். இந்தியா போன்ற நாடுகளில், வளரும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 சதவீத பெண் குழந்தைகள் ரத்த சோகை என்கிற அனீமியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ரத்த சோகை வராமல் நம்மை காத்துக்கொள்ள பயன்தரக்கூடிய பழம்தான் மாதுளை பழம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அதனால், அன்றாடம் அல்லது வாரத்திற்கு ஓரிரு நாட்களாவது இந்த மாதுளம் பழத்தை சாப்பிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு மாதுளை பழம் நிச்சயம் தினசரி உணவாக இருக்க வேண்டும்.
மாதுளை பழத்தை ஜூஸாக குடிப்பதைவிட மாதுளை முத்துக்களாக அப்படியே சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன் தரும். அதாவது, மாதுளை பழச் சாறாகக் குடிப்பதனால், சத்துக்கள் கிடைக்கும். அதில் உடனடியாக சத்துக்கள் கிடைக்கக்கூடிய தன்மை இருக்கும்.
மாதுளை பழத்தை முத்துக்களாக விதைகளுடன் சாப்பிடும்போது அதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருக்கிறது. நார்ச்சத்துகள் ரத்த நாளங்களில் கொழுப்புபடியாமல் தடுக்கிறது. மலம் எளிதாகக் கழிக்க உதவுகிறது.
அதனால், மாதுளையில் இருக்கும் நார்ச்சத்தின் பலங்களைப் பெற, மாதுளை பழத்தை ஜூஸாகக் குடிப்பதைவிட முத்துக்களாக சாப்பிடுவதால், நார்ச்சத்து கிடைப்பதால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
This one fruit can prevent my health issues! | Dr.G.Sivaraman | Health Basket Health Tips
குழந்தைகளுக்கு மாதுளைப் பழத்தை முத்துக்களாக உதிர்த்து சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகள் தயிர் சோறு, மோர் சோறு சாப்பிடுகிறார்கள் என்றால் அதில் மாதுளை முத்துக்களைக் கலந்து கொடுக்கலாம். மேலும், மாதுளை பழம் இரும்புச் சத்து, நார்ச்சத்து அளிப்பதோடு புற்றுநோய் வராமல் தடுப்பதை இன்றைய உணவு அறிவியல் கண்டுபிடித்திருப்பதாக மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.