நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள கறிவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? டாக்டர் விகடன் யூடியூப்பிற்கு அளித்த பேட்டியில் உணவியல் நிபுணர் தாரிணி கறிவேப்பிலையை சாப்பிடும் முறை பற்றி கூறியிருக்கிறார்.
Advertisment
கறிவேப்பிலையின் முழுமையான சத்துக்களுக்கு பச்சையாகப் பயன்படுத்த வேண்டும். கறிவேப்பிலை, பொதுவாக சாம்பார் அல்லது பொரியல்களில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்படுகிறது. இதனால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை அரைத்து சாம்பார், காய்கறி போன்ற உணவுகளில் சேர்த்தால், சத்துக்கள் முழுமையாக உடலுக்குச் சேரும்.
கறிவேப்பிலையை பச்சையாகப் பயன்படுத்துவதே சிறந்தது. சட்னி அல்லது துவையல் செய்யும்போது, வதக்காமல் பச்சையாகத் தேங்காய், பச்சை மிளகாய், வத்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம். துவையலுக்குப் பருப்பு வகைகளை வறுக்கும்போது, கறிவேப்பிலையை வதக்க வேண்டியதில்லை.
கறிவேப்பிலை பொடி செய்யும்போது, அதை வெயிலில் காயவைத்து பயன்படுத்துவது நல்லது. வானலியில் வதக்கினால், வைட்டமின் சி சத்து குறைந்துவிடும். வைட்டமின் ஏ எண்ணெய் சத்துக்களில் கரையக்கூடியது என்றாலும், தாளிக்கும்போது எண்ணெய் தானாகவே உணவில் சேர்வதால், தனியாக வதக்க வேண்டிய அவசியமில்லை.
Advertisment
Advertisements
பொதுவாக, அனைவரும் கறிவேப்பிலையைத் தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், உயர் பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் (சிறுநீரக நோய் அல்லது இதய நோய் உள்ளவர்கள்) கறிவேப்பிலையைத் தாளித்து மட்டும் பயன்படுத்தலாம். சட்னி, துவையல், குழம்பு போன்ற அதிக கறிவேப்பிலை சேர்க்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பேஸ்ட்டை மோருடன் அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். இது முடி உதிர்வையும் குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.