அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதேவேளையில் ஆரோக்கியத்தில் சமரசம் கூடாது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு செய்ய வேண்டும் என்று எண்ணுவோம். வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிட அவல் உருளைக்கிழங்கு கட்லெட் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தபின் சாப்பிட ஏற்ற சிப்பிள் ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
அவல் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
உருளைக் கிழங்குகளை வேக வைத்து தோல் உரித்து, நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவலை 15 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். உருளைக் கிழங்குடன் அவலை சேர்த்து கலக்கவும்.
அடுத்து, பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப சேர்த்து பிசையவும்.
புளிப்பு சுவைக்கு கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் பிசைந்து கொள்ளுங்கள். இப்போது, கலவையை எடுத்து உருண்டை பிடித்து கட்லெட்டுக்கு ஏற்ப தட்டையாக தட்டி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும். இதற்கு ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி, கட்லெட்டை போட்டு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். டீப் ஃப்ரை செய்ய வேண்டிய தேவையில்லை. அவ்வளவுதான் சுவையான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“