How to make curd within 30 minutes simple tips: தயிர் சாப்பிட யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் கோடை காலத்தில் மதிய உணவில் தயிர் தவறாமல் இடம் பெறும். சிலருக்கு குளிர்காலத்திலும் உணவில் தயிர் இருக்க வேண்டும். ஆனால், தயிர் கிடைக்க, நாம் பாலைக் காய்ச்சி 8 மணி நேரத்திற்கும் மேலாக உறைய வைக்க வேண்டும். அப்போது தான் கெட்டியான தயிர் கிடைக்கும். ஆனால் இனி அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அரை மணி நேரம் போதும்.
அரை மணி நேரத்தில் தயிரா? இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றினால், அரை மணி நேரத்தில் அருமையான தயிரை தயார் செய்து ருசிக்கலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தயிர் உறை வைப்பதற்கு, தேவையான அளவு பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் பொங்கி வந்த உடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இந்த பாலை 3 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தயிர் கெட்டியாக கிடைக்கும்.
காய்ச்சிய இந்தப் பாலை சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் முழுமையாக ஆறவைக்க கூடாது. சற்று சூடு இருக்க வேண்டும். அதன் பின்பு இந்த பாலை உறை வைக்க ஒரு சில்வர் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் பாலை ஊற்றுவதற்கு முன்பு, பாத்திரத்தின் உள்பக்கத்தில் முதலில் வாழை இலையை போட்டு விடுங்கள். வாழை இலைக்கு மேலே காய்ச்சிய பாலை ஊற்றி வெதுவெதுப்பான சூடாக இருக்கும் பாலில் 1 டேபிள் ஸ்பூன் அளவு உறை மோரை ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கிண்ணத்திற்கு மேலே ஒரு தட்டை போட்டு மூடி விடுங்கள்.
இதையும் படியுங்கள்: உங்களுக்கு பெஸ்ட் காலை உணவு இது… சுகர் பேஷியன்ட்ஸ் கவனிங்கப்பா!
அடுப்பில் அகலமான ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அதில் உள்ளே தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீருக்கு மேல் உறை போட்டு வைத்திருக்கும் கிண்ணத்தை வைத்து இட்லி பாத்திரத்தின் மேலே தட்டை போட்டு மூடி விடுங்கள். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, 1/2 மணி நேரம் அப்படியே இருக்க விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் இருக்கும் கிண்ணத்தை வெளியே எடுத்து ஒரு ஸ்பூன் விட்டு அப்படியே கிளறி பாருங்கள். கெட்டி தயிர் தயாராகி இருக்கும். ஆனால் புளிக்காத கெட்டித் தயிர் தான் நமக்கு கிடைத்திருக்கும். தேவைப்பட்டால் இதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அல்லது கொஞ்சமாக புளித்த தயிரை கலந்து புளித்த தயிரைப் பெறலாம்.
இந்தச் செயல்முறை சற்று கடினம் என்றாலும், அவசரத் தேவைக்கு இதனை முயற்சிக்கலாம். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து, உங்களுக்கு தயிர் தேவைப்பட்டால், இந்த செயல்முறையை டிரை பண்ணி பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil