பலருக்கும் குக்கரில் சோறு செய்து சாப்பிடுவது விருப்பமானதாக இருப்பது இல்லை. அதற்கு காரணம், குக்கரில் சமைத்தால் சோறு கேக் மாதிரி கட்டி கட்டியாக எடுக்க வேண்டியுள்ளது. சோறு வடிச்சி சாப்பிடும்போது சோறு உதிரியாகவும் நாம் விரும்பும் பதத்தில் வெந்து இருக்கும். அதனால், பலரும் குக்கரில் சோறு சமைத்து சாப்பிடுவதை விரும்புவதில்லை. அப்படியானவர்களுக்கு குக்கரிலேயே சோறு வடிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறோம். இப்படி செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ என்று கவலைப்பட வேண்டாம். 7 நிமிடத்தில் குக்கரில் சோறு வடிக்கலாம், இதனால், நேரமும் மிச்சம், சமைப்பதற்கான கேஸ் செலவும் கம்மிதான்.
குக்கரில் சோறு வடிப்பது எப்படி என்று இங்கே பார்கலாம்.
வழக்கமாக நீங்கள் குக்கரில் சோறு சமைக்கும்போது, அரிசியை ஊறவைத்து, போட்டு, 3 பங்கு தண்ணீர் சேர்த்து விசிலை மூடி செய்வீர்கள் இல்லையா? அது போல இங்கே செய்யக்கூடாது.
முதலில் உங்கள் குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வழக்கமாக அந்த குக்கரின் அளவுக்கு ஏற்ப எவ்வளவு அரிசி போடுவீர்களோ அவ்வளவு அரிசியை எடுத்து நன்றாகக் கழுவி போடுங்கள். குக்கரில் முக்கால் பாகம் அளவு தண்ணீர் ஊற்றுங்கள். கேஸ்கட் போட்டு குக்கரை மூடுங்கள். ஆனால், விசில் போட்டு மூடக் கூடாது அதை எடுத்து விடுங்கள்.
இப்போது ஸ்டவ்வைப் பற்ற வைத்து, தீயை சிம்மிலும் இல்லாமல் ஹை ஃபிலேமிலும் இல்லாமல் மிதமான அளவில் தீயை வைத்து சரியாக 5 நிமிடம் வேக விடுங்கள். இந்த 5 நிமிடத்திற்குப் பிறகு, விசில் வழியாக கஞ்சி தண்ணீர் தெறிக்கும் அப்போது, விசில் எடுத்து மூடி விடுங்கள். விசில் மூடிய பிறகு, சரியாக 2 நிமிடம் அதே மிதமான தீயில் வேக விடுங்கள். சரியாக 2 நிமிடத்துக்கு பிறகு, குக்கரில் இருந்து விசில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, ஸ்டவ்வை அனைத்துவிடுங்கள். அப்படியே ஒரு 15 - 20 நிமிடங்கள் இருக்கட்டும் விட்டுவிடுங்கள். இப்போது சோறு நன்றாக வெந்துவிட்டு இருக்கும்.
இப்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் விசில் வழியாக உள்ளே இருக்கும் ஆவியை வெளியேற்றுங்கள். ஆவி முழுவதுமாக வெளியேறிய பிறகு, விசிலை எடுத்துவிடுங்கள். இப்போது குக்கரைத் திறந்து, பார்த்தால் சோறு நன்றாக வெந்து இருக்கும். இப்போது அதில் இருக்கும் கஞ்சி தண்ணீரை வடிக்க வேண்டும். அதற்கு குக்கர் மூடியில் இருக்கும் கேஸ்கட்டை ரப்பரை எடுத்துவிடுங்கள். கேஸ்கட் இல்லாமல் குக்கரை மூடுங்கள். குக்கரின் விசிலையும் மூடுங்கள். குக்கரை நன்றாக மூடிய பிறகு, நீங்கள் வழக்கமாக ஒரு பாத்திரத்தில் சோறு வடிப்பீர்கள் இல்லையா, அதே போல, குக்கரை அதற்கு ஏற்ற ஒரு பாத்திரத்தில் சாய்த்தால் அதில் உள்ள கஞ்சி தண்ணீர் வடிந்துவிடும். இப்போது குக்கரை திறந்து பாருங்கள், பளபளவென வடித்த சோறு கிடைக்கும். சோறு நன்றாக மிருதுவாக வெந்து இருக்கும். உதிரியாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள்.