/indian-express-tamil/media/media_files/2025/09/11/urad-kali-2025-09-11-15-09-47.jpg)
உளுந்தங்களி, கருப்பு உளுந்து, பச்சரிசி, கருப்பட்டி மற்றும் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவு. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பூப்பெய்தும் பெண்களுக்கு, உடல் வலிமையையும், கர்ப்பப்பை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவும். மேலும், இது இடுப்பு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த சுவையான மற்றும் சத்தான உணவை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இதை எப்படி செய்யலாம் என்று சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
பச்சரிசி - ¼ கப்
பனங்கருப்பட்டி - 1 கப்
நல்லெண்ணெய் - ½ கப்
ஏலக்காய் - 4
சுக்கு - ஒரு சிறிய துண்டு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில், கருப்பு உளுந்தையும், பச்சரிசியையும் தனித்தனியாக லேசான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவைத்து, சுக்கு மற்றும் ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம்.
அடுத்து, ஒரு பாத்திரத்தில் பனங்கருப்பட்டியைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கருப்பட்டி முழுவதுமாக கரைந்ததும், அதை வடிகட்டி, தூசுகளை நீக்கிவிடவும். ஒரு கனமான பாத்திரத்தில், வடிகட்டிய கருப்பட்டி பாகை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பாகு கொதித்ததும், தீயைக் குறைத்து, அரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி சேராதவாறு தொடர்ந்து கலக்கவும்.
மாவு கெட்டியானதும், சிறிது சிறிதாக நல்லெண்ணெயைச் சேர்த்து கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல், அல்வா போல சுருண்டு வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். களி நன்கு வெந்து, சரியான பதத்துக்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சுவையான மற்றும் சத்தான உளுந்தங்களி தயார். இதை சூடாகவோ அல்லது உருண்டைகளாகப் பிடித்தோ சாப்பிடலாம். இது எலும்புகளுக்கு வலு சேர்க்கும். வாரம் இருமுறை கூட சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.