/indian-express-tamil/media/media_files/2025/06/07/cdVVMFC9Ncd2iYPElHxU.jpg)
பஞ்சு போன்ற மென்மையான இட்லி செய்வது என்பது பலருக்கும் ஒரு சவாலான காரியமாக இருக்கும். இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி, ஹோட்டலில் சாப்பிடுவது போல சுவையான இட்லியை வீட்டிலேயே செய்யலாம். இந்த செய்முறையில் அரிசி மற்றும் உளுந்தின் சரியான அளவு, மாவு அரைக்கும் முறை மற்றும் புளிக்க வைப்பது போன்றவை மிகவும் முக்கியமான செய்முறைகளாகும். எனவே ஒவ்வொன்றையும் சரியான அளவில் செய்யுங்கள். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் எப்படி செய்வது என்று யாஸ் குக்கிங் சேனல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி: 1 கிலோ (முக்கால் பங்கு இட்லி அரிசி மற்றும் கால் பங்கு பச்சரிசி). முழுவதுமாக இட்லி அரிசியையும் பயன்படுத்தலாம்.
உளுந்து பருப்பு: 150 கிராம்
வெந்தயம்: ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில், அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், சுத்தமான நீரில் அவற்றை ஐந்து மணி நேரம் ஊற விடவும். நன்கு ஊறிய பிறகு, மாவை கிரைண்டரில் அரைக்க வேண்டும். கிரைண்டரில் அரைக்கும் போது, உளுந்தை தனியாகவும், அரிசியை தனியாகவும் அரைப்பது சிறந்தது. ஒருவேளை மிக்ஸியில் அரைத்தால், அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கலாம்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, நன்றாக கலந்து விடவும். இந்த மாவை புளிக்க வைப்பதற்காக ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைக்கவும். இட்லி மாவு கெட்டியாக இருக்க வேண்டும். இட்லி செய்வதற்கு முன், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இட்லி தட்டில் ஒரு துணியை விரித்து, அதில் இட்லி மாவை ஊற்ற வேண்டும்.
மாவு ஊற்றிய இட்லி தட்டை பாத்திரத்தில் வைத்து வேக விடவும். இட்லி வெந்ததும், அது துணியில் ஒட்டாமல் வரும். இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே பஞ்சு போன்ற மென்மையான மற்றும் சுவையான இட்லியை செய்யலாம். இதற்கு சட்னி, சாம்பார் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.