உங்கள் வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டால், அவர்களுக்கு உடனே என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வித்தியாசமாக கோவை ஸ்டைல் முட்டை பொரியல் செய்து கொடுங்கள். எல்லாரும் ருசிக்கலாம், எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்.
வழக்கமாக, முட்டையை ஆம்லேட் போடுவது, முட்டை குழம்பு வைப்பது என்று இல்லாமல், கோவை ஸ்டைலில் முட்டை பொரியல் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கோவை கவுண்டம்பாளையம் மனோன்மணி முட்டை பொரியல் எப்படி செய்கிறார் என்று செஃப் தீனா கிச்சன் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.
கோவை ஸ்டைலில் முட்டை பொரியல் செய்வது எப்படி?
முதலில் உங்களுக்கு எத்தனை முட்டைகள் தேவையோ அத்தனை முட்டையை எடுத்து நன்றாக வேக வைத்து, உரித்து பொடித்துக்கொள்ளுக்கள். அதனுடன் மசால பொருட்களை சேர்த்து செய்வதுதான் இந்த முட்டை பொரியல்.
கோவை ஸ்டைலில் முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை 12
பெரிய வெங்காயம் 5
தக்காளி 2
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 1/2 டீஸ்பூன்
அரைமூடி தேங்காய் துருவியது
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 5
கறிவேப்பிலை தேவையான அளவு
கொத்தமல்லி இலை தேவையான அளவு
கடலை எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கோவை ஸ்டைல் முட்டை பொரியல் செய்முறை:
முதலில் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு முட்டையை வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு முட்டையை துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். முட்டையின் மஞ்சள் கருவை விரும்பாதவர்கள் அதை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவை மட்டும் பொடித்து வைத்துக்கொள்ளலாம்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து ஒரு கடாயை வையுங்கள், அதில் கடலை எண்ணெய் தேவையான அளவு ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும், கடலைப் பருப்பு போடுங்கள், கடலைப் பருப்பு சிவந்த உடனே, வெங்காயத்தை கொஞ்சம் பெரிய துண்டுகளாக் நறுக்கிப் போடுங்கள்.வெங்காயம் வதங்கும்போது கொஞ்சம் உப்பு போடுங்கள். வெங்காயம் பாதி வதங்கியதும், பச்சை மிளகாயைப் பாதியாகக் கீறி போடுங்கள், அடுத்து கறிவேப்பிலை போடுங்கள், வெங்காயம் மேலும் கொஞ்சம் வதங்கியவுடன் தக்காளி நறுக்கிப் போடுங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் போடுங்கள். நன்றாகக் குழையும் வரை வதக்குங்கள்.
இதற்கு ஸ்டவ்வில் தீயை சிம்மில் வைத்துவிட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு கிளறிவிடுங்கள். இப்போது உங்களுக்கு தேவையான அளவு உப்பு போட்டுக்கொள்ளுங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள்.
இப்போது பொடித்து வைத்த முட்டையைப் போட்டு நன்றாகக் கலந்துவிடுங்கள். அடுத்து, அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயைப் போடுங்கள். அடுத்து கொத்தமல்லி போட்டு நன்றாகக் கிளறிவிடுங்கள். அவ்வளவுதான், கோவை ஸ்டைலில் முட்டை பொரியல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.