பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று அவருடைய யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.
முதலில் உருளைக் கிழங்கை உப்பு போடாமல் வேகை வைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்.
வானலியை எடுத்து ஸ்டவ்வில் வையுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். வானலி காய்ந்ததும் அதில் சிறிது அளவு கடலை எண்ணெய் ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு போடுங்கள், கடுகு பொரியும்போது அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு போடுங்கள். உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறும்போது, முந்திரி பருப்பை போடுங்கள். ஸ்டவ் தீயை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள்.
முந்திரி பருப்பு பொன்னிறமாகும் போது ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடுங்கள். 2 கொத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போடுங்கள். 20 கிராம் இஞ்சி போடுங்கள். நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். அடுத்து இதனுடன், மசித்து வைத்திருக்கிற உருளைக் கிழங்கை போட்டு நன்றாக கிளறிவிடுங்கள், இப்போது, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள், அடுத்து உருளைக் கிழங்குக்கு அரை ஸ்பூன் உப்பு அல்லது தேவையான அளவு உப்பு போடுங்கள். அடுத்து அரை ஸ்பூன் பெருங்காயத் தூள் போடுங்கள், நன்றாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைப் போடுங்கள், இவை எல்லாம் நல்லா ஒன்றாக சேரும் வரை கிளறி கலக்கி விடுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு, காரம் வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல, முதலில்யே கொஞ்சம் பச்சை மிளகாயைக் கூடுதலாக போட்டுக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய் நன்றாக இருந்தால் உருளைக் கிழங்கு போண்டா நன்றாக இருக்கும். நன்றாகக் கிளறிவிடுங்கள். இப்போது உருளைக் கிழங்கு போண்டாவுக்குள் வைப்பதற்கான உருளைக் கிழங்கு மசலா தயார். எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, இப்போது ஒரு வானலியை எடுத்து ஸ்டவ்வில் வைத்து அதில் கடலை எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்துங்கள். இப்போது கடலை மாவு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
200 கிராம் கடலை மாவு எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் 50 கிராம் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளுங்கள், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை சமையல் சோடா போட்டுக்கொள்ளுங்கள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துகொள்ளுங்கள், இப்போது எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடுங்கள். இப்போது தண்ணீர் ஊற்றி மாவு கலக்குங்கள், மாவு கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும். அதாவது தோசை மாவு மாதிரி பதத்தில் கலக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, ஏற்கெனவே தயார் செய்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கு மசாலாவை கையில் எண்ணெய் தடவிக் கொண்டு உங்களுக்கு தேவையான அளவில் உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, இந்த உருளை கிழங்கு மசாலா உருண்டைகளை போண்டா மாவில் முக்கி எடுத்து உடையாமல் 2 விரலில் எடுத்து வானலியில் காயும் எண்ணெயில் போட்டு வெந்த பிறகு எடுங்கள். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அவ்வளவுதான் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்டில் உருளைக் கிழங்கு போண்டா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.