முருங்கைக் கீரை சத்து நிறைந்தது. வாரத்தில் ஒருமுறை முருங்கைக் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது. என்றாலும், முருங்கைக் கீரையை உருவி எடுப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலைதான். அப்படி, முருங்கைக் கீரை உருவி எடுப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கு நளினி மாணிக் குக்கிங் சேனலில், முருங்கைக் கீரையை உருவி எடுப்பதற்கு மிகவும் ஒரு எளிதான டிப்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஒரு பிளாஸ்டிக் காலி அரிசி பையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கட்டு முருங்கைக் கீரையை அந்த காலி அரிசி பையில் போட்டு நன்றாக சுருட்டி, அந்த பையின் மீது இரண்டு தோசைக் கல்லை வையுங்கள். ஒரு 2 அல்லது 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எடுத்து, முருங்கைக் கீரைக் கட்டை அந்த அரிசிப் பைக்குள்ளேயே உதறுங்கள். அப்போது, முருங்கைக் கீரை பாதி உதிர்ந்துவிடும். இதே போல, மீண்டும் முருங்கைக் கீரைக் கட்டை அந்த காலி அரிசிப் பையில் வைத்துவிட்டு, தோசைக் கல்லை வைத்து முடிவிடுங்கள். இப்போது மீண்டும் திறந்து முருங்கைக் கீரைக் கட்டை உதறினால், அனைத்து கீரைகளும் கொட்டிவிடும். இப்போது சிரமமில்லாமல் முருங்கைக் கீரை உருவியாகிவிட்டது.
முருங்கைக் கீரையை உருவி எடுப்பதற்கு சிரமப் படுபவர்களுக்கு இது எளிதான ஒருவழி. இருப்பினும், முருங்கைக் கீரையை உருவத் தெரிந்தவர்களுக்கு இந்த டிப்ஸ், கொக்கு தலை மேல வெண்ணெய்யை வைத்து அது உருகி வழிந்த பிறகு, கொக்கைப் பிடிக்கிற கதையாகத்தான் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“