கேரளாவில் ஓணம் திருவிழாவின் போது பரிமாறப்படும் உணவுகளில் இஞ்சிப்புளி முக்கிய இடத்தைப் பெறும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெசிபியை எளிமையாக செய்வது எப்படி என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தேவையான பொருள்கள்:
200 கிராம் இஞ்சி,
75 கிராம் புளி,
தேங்காய் எண்ணெய் 100 மி.லி
8 வரமிளகாய்கள்
ஒரு ஸ்பூன் கடுகு
மூன்று பச்சை மிளகாய்கள்
ஒரு கொத்து கறிவேப்பிலை
10 சின்ன வெங்காயம்
75 கிராம் வெல்லம்
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் 3/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை நன்றாக கழுவி எடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 100 மி.லி தண்ணீரில் 75 கிராம் புளியை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், 100 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் 8 வர மிளகாய்கள், ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக பொறிந்த பின்னர், பொடியாக நறுக்கிய மூன்று பச்சை மிளகாய்களை சேர்க்க வேண்டும். இத்துடன், ஒரு கொத்து கறிவேப்பிலை, நறுக்கிய 10 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் இஞ்சி, புளிக்கரைகல், 75 கிராம் வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதன்பின்னர், மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 3/4 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து 6 நிமிடங்களுக்கு குறையாமல் வதக்க வேண்டும். இறுதியாக, இக்கலவை மீது 50 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் ருசியான இஞ்சிப்புளி தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“