நாக்கு ஊறும் இஞ்சி தொக்கு, இப்படி செய்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிது
தனி மிளகாய் தூள் - 2 டேபுள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தனியா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
பெருங்காயம் - சிறிது
நல்லெண்ணெய் - தாளிக்க
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கலாம். ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மழை, குளிர் காலத்திற்கு ஏற்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். மா இஞ்சியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.