Instant Aval Idli: ஒரே மாதிரியாக இட்லி செய்து உங்களுக்கும் சாப்பிடுபவர்களுக்கும் போரடிக்கிறதா? ஒரு மாற்றத்திற்காக, அரை மணி நேரத்தில் இன்ஸ்டண்ட் அவல் இட்லி செய்து பாருங்கள். அவல் இட்லி அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க.
தமிழ்நாட்டின் பிரதான உணவு வகையாக இட்லி, சாம்பார், சட்னிதான். பெரும்பாலும், காலையில் டிஃபன் இட்லிதான். ஆனால், இட்லி செய்வதற்கு முன்தின நாளே அரிசி மாவு அரைத்து வைக்க வேண்டும். உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியாக இட்லி செய்து போரடிக்கிறதா? தினமும் ஒரே மாதிரியாக இட்லி சாப்பிட்டு போரடிக்கிறதா? அவசரமாக இட்லி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக வித்தியாசமாக, அரை மணி நேரத்தில் இன்ஸ்டன்ட் அவல் இட்லி செய்வது எப்படி என்று இங்கே வழிகாட்டுகிறோம். அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபியாக இருக்கும்.
அவல் இட்லி செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
1 கப் நைஸ் அவல்
1 1/2 கப் இட்லி ரவா
உப்பு தேவையான அளவு
1 கப் தயிர்
தண்ணீர் தேவையான அளவு
1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
செய்முறை:
1 கப் நைஸ் அவலை எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவல் எடுத்துக்கொண்ட அதே அளவு கப் பயன்படுத்தி, 1 1/2 கப் இட்லி ரவா எடுத்துக்கொள்ளுங்கள்.
பொடி செய்த அவல், இட்லி ரவா இரண்டையும் நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து (மிக்ஸ் பண்ணுங்க) விடுங்கள்.
அதில் 1 கப் தயிர் ஊற்றி நன்றாக கலக்குங்கள், தயிர் புளித்திருந்தாலும் பரவாயில்லை, நன்றாக புசுபுசுவென இட்லி வரும். அதனுடன் சிறிது அளவு தண்ணீர் விட்டு கலக்குங்கள். எப்படியும் 1 கப் தண்ணீர் தேவைப்படும் மிதமான கெட்டி சட்னி பதத்துக்கு கலக்குங்கள்.
இந்த மாவை 20 நிமிடம் மூடிவைத்து விடுங்கள். நன்றாக ஊறிவிடும். அதற்குள் உங்களுடைய வழக்கமான சட்னியை செய்து வைத்துவிடுங்கள்.
20 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், மாவு நன்றாக ஊறிவிட்டிருக்கும். அதனுடன் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சேர்த்துக் கலந்து விடுங்கள். பேக்கிங் சோடாவை இப்படி கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும்.
பிறகு, இட்லி தட்டில் எண்ணெய் ஊற்றி தடவி வைத்துக்கொள்ளுங்கள். அதில் தயாராக இருக்கும் மாவை ஊற்றி வழக்கமாக இட்லி அவிப்பதைப் போல அவித்து 12 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள். புசுபுசுவென அவல் இட்லி வெந்து வந்திருக்கும். ஆறிய பிறகு, இட்லியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் உங்களுக்கு விருப்பமான சட்னியை சேர்த்து சாப்பிடலாம். இந்த இன்ஸ்டண்ட் அவல் இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபியாக இருக்கும், இன்று உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“