அவசரமான நேரங்களில் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவை தேடுகிறீர்களா? அரிசி, பருப்பை ஊற வைக்க வேண்டிய கவலையில்லாமல், கோதுமை ரவை கொண்டு இன்ஸ்டன்டாக அடை தோசை செய்யலாம். புளித்த மாவு தேவைப்படாத இந்த அடை, சத்தானதாகவும் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் இருக்கும். கோதுமை ரவை அடை செய்யும் முறையை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை,
வெள்ளை ரவை,
தண்ணீர்,
சீரகம்,
இஞ்சி,
பச்சை மிளகாய்,
பெரிய வெங்காயம்,
கேரட்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி இலைகள்,
சில்லி ஃப்ளேக்ஸ்,
அரிசி மாவு,
கடலை மாவு மற்றும்
உப்பு.
செய்முறை:
ஒரு கப் கோதுமை ரவை, இரண்டு டீஸ்பூன் வெள்ளை ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இவை மூழ்கும் அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இவற்றை சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
இவ்வாறு நன்கு ஊறிய ரவையுடன் அரை டீஸ்பூன் சீரகம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், சில்லி ஃப்ளேக்ஸ், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இதன் பின்னர், அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடுபடுத்த வேண்டும். கல் நன்றாக சூடானதும், தயாரித்து வைத்திருக்கும் மாவை ஊற்றி ஒரு நிமிடத்திற்கு வேக வைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்தால் இன்ஸ்டன்ட் அடை தோசை தயாராகி விடும். இதன் சுவையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.
இந்த இன்ஸ்டன்ட் அடை தோசை, காலை உணவுக்கு ஒரு விரைவான, சத்தான மற்றும் சுலபமான தேர்வாகும். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் மிகவும் அருமையாக இருக்கும்.