நம் உடலுக்கு வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து என பல தரப்பட்ட சத்துகள் தேவைப்படும். இவற்றில் இரும்பு சத்து இன்றியமையாதது. நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இரும்பு சத்து பெரும்பங்காற்றுகிறது. அந்த வகையில் இரும்பு சத்து நிறைந்த உணவு பொருள்கள் குறித்து மருத்துவர் சிவராமன் விவரித்துள்ளார்.
தானிய வகைகளில் கம்புவில் இரும்பு சத்து அதிகளவில் இருப்பதாக சிவராமன் தெரிவித்துள்ளார். கம்பு மாவை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை விளைவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், எள்ளுவிலும் இரும்பு சத்து காணப்படுவதால் அதனை உருண்டை அல்லது மிட்டாய் வடிவில் சாப்பிடுவது சுவையாக இருப்பதுடன், இரும்பு சத்தை அதிகரிக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எள்ளை பொடியாக சாப்பிடுவதும் சிறப்பானதாக இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கறிவேப்பிலை, அத்திப்பழம், மாதுளை ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுவதால், அவற்றை தவறாமல் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனினும், இரும்பு சத்தை உடல் சீரான அளவில் எடுத்துக் கொள்ள வைட்டமின் சி அவசியம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் அது உடல் நலனுக்கு நன்மை தரும் எனக் கூறப்படுகிறது. ஆனால், நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிட்டால் அதன் சத்து நமக்கு கிடைக்காது என சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“