சமையல் துறையில் வல்லுநராக வலம் வருபவர் வெங்கடேஷ் பட். இந்த துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட இவர், விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமானார். தற்போது செஃப் வெங்கடேஷ் பட் டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
ஒரு ரெசிபியை எப்படி எளிதில் செய்து அசத்தலாம் என்பதை மிக நிதனாமாகவும், தெளிவாகவும் சொல்லி விளங்க வைக்கக் கூடியவராகவும் செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் கற்ற சமையல் கலையை உலகறிச் செய்து வருகிறார். இவரது ரெசிபிகள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் ஜாங்கிரி எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - 400 கிராம் (3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தது)
கார்ன் மாவு - 40 கிராம்
சர்க்கரை பாகு தயார் செய்ய
தண்ணீர் - 300 மி.லி
சர்க்கரை - 3/4 கிலோ
ஜாங்கிரி கலர்
ரோஸ் எசன்ஸ் - 10 துளி
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். பிறகு, அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். இவை ஒரு கம்பி பதம் அளவுக்கு வரும் வரை சுமார் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
இப்போது, ஏற்கனவே அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகில் ஜாங்கிரி கலர் சேர்க்கவும். பிறகு அதனுடன் ரோஸ் எசன்ஸ் 10 துளிகள் சேர்த்து கொதிக்க வைத்து கீழே இறக்கினால் சர்க்கரை பாகு ரெடி.
இதன்பின்னர், ஏற்கனவே 3 மணி நேரம் நன்கு ஊற வைத்த உளுந்தை கிரைண்டரில் போட்டு ஆட்டவும். மாவு ஆடும் போது சர்க்கரை பாகுக்கு ஊற்றியது போக மீதமிருக்கும் ஜாங்கிரி கலரை மாவுடன் சேர்த்து ஆட்டவும். 5 முறை மாவுக்கு தண்ணீர் தெளித்து ஆட்டிய பிறகு, மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் கார்ன் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஒரு சாஸ் ஊற்றும் டப்பா அல்லது கோனில் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் சூடான கடலை எண்ணெயில், ஜாங்கிரி போல் சுழற்றி மாவு ஊற்றவும். அவை வெந்து வந்தவும், அதனை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து எடுத்தால் டேஸ்டியான ஜாங்கிரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“