இனி ரோட்டுக்கடலையில் கிடைப்பதுபோல் காளான் மசாலா செய்து சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் – 200 கிராம்
காளான் – 200 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
சோள மாவு (கான்பிளவர் மாவு) – 25 கிராம்
கரம்மசாலா – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் - 2 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கிய)
கறிவேப்பிலை
தக்காளி - 3
செய்முறை: முதலில் முட்டைகோஸையும், காலனையும் நன்றாக கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகோஸ், மற்றும் காளானுடன் மைதா, சோள மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இவை பிசைய நாம் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளலாம். உப்பு சேர்த்து பிசையும்போது, தானாகவே தண்ணீர் விடும். தவிர, முட்டைகோஸ், காளானை தண்ணீரில் அலசிய போது அந்த தண்ணீர் இதில் இருக்கும்.
ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவில் வடை போல முறுகலாக சுட்டு எடுத்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
புளிபிற்கு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அவற்றை வதங்கும் வெங்காயத்துடன் சேர்க்கவும். பிறகு இவற்றுக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை, நன்றாக வதக்கவும். (அதாவது தக்காளியின் பச்சை வாடையும், மசாலா பொருட்களின் பச்சை வாடையும், முழுமையாக போக வேண்டும்).
இப்போது, முன்பு பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் காளானை சிறு, சிறு துண்டுகளாக உடைத்து, இந்த மசாலாவோடு 5 முதல் 7 நிமிடங்களுக்கு கிளறி இறக்கவும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூப்பரான ரோட்டுக்கடை காளான் தயாராக இருக்கும். இவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை தூவி ருசித்து மகிழவும்.